Saturday, October 30, 2010

உயிருடன் நான்

உயிருடன் நான்
அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பருவத்திற்கே உரிய குறும்புத்தனமும் விளையாட்டுத்தனமும் ஒருங்கே இருந்தன. வீட்டுக்கு வந்தாலோ இவ்விரண்டும் பலமடங்காகிவிடும். எங்கள் விளையாட்டெல்லை விரிந்திருந்தது. குளத்துக்கரை, கண்மாய்க்கரை, கோவில்வீடு, களத்துமேடு, தென்னந்தோப்பு, கருவேலங்காடு, புளியமரத்தடி என எங்கு காணினும் விளையாட்டுத்தான். விளையாடும் ஆட்டங்களோ காலத்திற்கு ஏற்றபடி வடிவெடுக்கும். பம்பரம், கோலிக்குண்டு, தாவடிவாது (தாழ்வாக வடிந்தார்போல் வளர்ந்துள்ள மரக்கிளைகளில் எறி விளையாடும் ஒருவகை ஆட்டம்.)  இவைதவிர வெளியில் செல்லமுடியாமல் வெயிலோ மழையோ சூழ்ந்திருந்தால் வீட்டிலேயே விளையாடும் பல விளையாட்டுகள் எங்களிடம் இருந்தன. இவற்றின் ஊடாக பள்ளி, படிப்பு, வீட்;டுப்பாடம் இவையெல்லாம் மெல்லிய இழைபோலப் படர்ந்திருந்தன. எங்கேனும் அறுந்துவிடவில்லை.
 எங்கள்; விளையாட்டும்;, விளையாட்டிடமும், துள்ளித்திரிந்த ஒற்றைத்தெருவும், தாமரைக்குளமும், ஊரைச் சுற்றி வளர்ந்திருந்த மரவகைகளும் பள்ளிக்கல்வியைவிட மேலான, யாரும் கொடுக்கவியலாத அனுபவங்களைக் கொட்டிக்கொடுத்துள்ளன. அந்தச் சிறுவப்பருவம் தொலைக்காட்சியின் தொல்லையால் தொலைந்துபோகாத பருவம். நட்புகளுக்குள் எழும் சின்னச் சின்ன சண்டைகள். பள்ளி செல்லும் வழியில் மோதல்கள்;. இவையெல்லாம் சில நாட்கள் நீடிக்கும் பொழுதுபோக்குகள். நீந்தி மகிழ நீர்தந்த கண்மாய், எங்களுக்குக் கடலின் தூரக்காட்சியைக் காட்டிய எங்கள் ஊர் உயரிப்புளி - யமரம் இவையெல்லாம் எங்களுக்கு வளங்கிய அறிவைக்காட்டிலும் சிறந்ததை யாரும் வளங்கியதில்லை.
 ஒவ்வொருநாளும் இனிமைதான். அதில் நாய்களோடு நாங்கள் கொண்டிருந்த தொடர்பை மட்டும் இங்கே விரிக்கின்றேன். இங்கு நாங்கள் என்பது என்றும் யாராலும் பிரிக்க இயலாது என எண்ணிக் கொண்டிருந்த இளமைக்கால நண்பர்கள். காலமும் கல்வியும் எங்களைப் பிரித்துவிட்டன. நம் நாட்டுக் கல்விமுறை நம்மில் பலரைச் சொந்த ஊரிலிருந்து பிடுங்கி எறிந்துள்ளது. நாய்கள் எங்கள் நண்பர்வட்டத்தின் ஒரு அங்கம். அவையின்றி நாங்கள் வெளியே செல்வதில்லை. எந்தத் தீனியும் போட்டது கிடையாது. ஆனால் அவை எங்களுடன் வீட்டுக்குள் மட்டும்ழூழூ வருவதில்லை. கருப்பன், சிவலை, பொரியன், மணி, சின்னான் என நாய்களுக்கும் எங்களிடம் பெயருண்டு. பெயருக்கு ஏற்ற செயல் அந்த நாய்களிடம் உண்டு. ஆனால் வெளியூர் நாய்கள் எங்கள் எதிரிகள். நாங்கள் மட்டுமே அவற்றின் எதிரிகள். எங்கள் நாய்கள், எங்களுக்கு முன்பாகப் பாய்ந்து அவற்றைத் தாக்கும். கால ஓட்டத்தில் அந்தவூர்ப் பெண்நாய்களின் பின்னே ஓடித்திரியும். அந்த ஊர் ஆண்நாய்களுடன் சண்டையிடும். அந்த அழகை எதற்கும் ஒப்பிட முடியாது.
முயல்வேட்டை, அணில்வேட்டை, ஓணான் வேட்டை, கௌதாரிமுட்டைதேடல், காடைமுட்டைதேடல், தாமரைக்கொட்டைதேடல், பனையின் இளங்குருத்து அகழ்தல் எனத் தேடலும் வேட்டையுமாக எங்கள் விடுமுறைநாட்கள் கழிந்தன. அது பொன்னைவிடச் சிறந்த காலம்.
நாங்கள் எழுவர் படை. எங்கள் பேச்சில் அப்போதே அரசியலும், சினிமாவும் அலையடிக்கும். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒளிவிசிப் போவார். புலிப்படையின் செய்திகளை வானொளியூடாகக் கேட்டிருந்தோம். அது புலிகள் இயக்கம் தடைசெய்யப்படாத காலம். எப்போதாவது அவர்களின் வண்டிகளைப் பார்த்ததுண்டு. அவ்வப்போது அறிவியலும் எங்கள் அறிவுக்கு எட்டும். எப்படிச் செடிகள் முளைக்கின்றன? ஏன் சிறுநீர் உப்புக்கரிக்கின்றது? உலகத்தின் நடுப்பகுதி எது? என்பன அன்றைய பசுமரத்தாணிக் கேள்விகள்.
    தாமரைக்குளக்கரை எங்கள் விளையாட்டுத்திடல். காதலியையே சுற்றிவரும் காதலனைப்போல் நாங்களும் இந்தக் குளக்கரையைச் சுற்றாமல் தூங்கச்சென்றது கிடையாது. சும்மா சுற்றுவது கிடையாது. கையில் ஒரு தடி இருக்கும். கூடவே விளையாட்டுக்கருவிகள் இருக்கும். எந்த இடத்திலும் தடி தேவைப்படலாம். எந்த இடமும் ஆடுகளமாகலாம். விடுமுறைநாட்கள் என்றால் எல்லாமரத்தடியும் எங்கள் வசம். இதுவரை எங்கள் வேட்டைத்திறனைப்பற்றிச் சொல்லவே இல்லை.
    எங்கள் வேட்டை எந்த நேரமும் தொடங்கப்படும். அதற்கு நேரம், இடம், பொருள், வேட்டைக்கருவி எதுவும் பொருட்டல்ல. வேட்டையுயிர்தான் அதைத் தீர்மானிக்கும். செல்லும் வழியில் வேட்டையுயிர் எதாவது தட்டுப்பட்டால் முதலில் அதன் உயிர்முடித்த பின்தான் அந்த இடம்விட்டே நகர்வது. இந்த வேட்டையில் கலந்துகொண்டு பள்ளிக்குக் காலம்தாழ்த்திச் சென்று அடிவாங்கிய அனுபவங்கள் எண்ணிலடங்கா.
    பாவம் அந்த ஓணான்கள். எங்களைப்பார்த்துக் கிண்டல் செய்யும். அவ்வளவுதான். அவற்றின் தலை துண்டாடப்படும். குறிதவறாமல் கல்லெறிவதில் நான் தேர்ந்தவன். ஓணானின் தலைதான் என்குறி. தலைதவிர வேறெங்கும் அடிபடாது. கையில் எது கிடைத்தாலும் எறிந்துவிடுவேன். ஏறியக் கல் தேடுவதற்குள் ஓணான் மறைந்துவிட்டால் என்னசெய்வது?  எறிந்தபின்தான் எறிந்தது எப்பொருள் என யோசிப்பேன்.
    எங்கள் ஊர் சிறியது என்பதால் மணவிழா போன்ற நிகழ்வுகள் மிகக்குறைவு. அப்படி யார்வீட்டிலேனும் விழா வந்துவிட்டால் எங்கள் ஊருக்கே திருவிழாதான். விழாமுடியும்வரை அதைப்பற்றிய பேச்சுதான். பெண்கள் விழாவீட்டில் கூடுவார்கள். விருந்துக்கான அரிசி புடைத்துத் தருவார்கள். ஆண்கள் சமையலுக்குத் தேவையான விறகு உடைத்துத் தருவார்கள். விழாவீடு சுண்ணாம்புநீரில் குளிக்கும். தெருமண் நீக்கப்பட்டுப் புதுமண் கொட்டப்படும். இன்னபிற முன்னேற்பாடுகள் ஆங்காங்கே நடக்கும். பந்தற்கால் ஊன்றிய நாள் முதல் ஊராரில் நெருங்கிய பக்காளி, உறவினர்கள் மற்றும் ஊரிலுள்ள குழந்தைகள் அனைவரும் விழாவீட்டில்தான் உணவு உண்ணவேண்டும். இவையெல்லாம் எங்கள் ஊரின் எழுதப்படாத விதிமுறையாகும்.
விழாநாள் அன்று அசைவ உணவு சமைப்பார்கள். பலவூர்களிலும் இருந்து உறவினர்கள் வருவார்கள். விழா களைகட்டும். இதுதான் எங்களுக்குத் திருவிழாவே. ஊர்த்திருவிழா என்று ஒன்று இல்லவேயில்லை. அன்றைய பகலுணவு எங்களுக்கு இருமுறை கிடைக்கும். முதல் பந்;தி குழந்தைகள் பந்தி. நாங்களும் விருந்தினராக வந்த குழந்தைகளும் முதற்பந்தியில் அமர்வோம். கடைசிப்பந்தியிலும் பசிப்பவன் மறுமுறை உண்ணலாம். இந்த இரு பந்திகளுக்கும் இடையில்தான் உள்ளுர்வீரர்களான நாங்கள் எங்கள் வேட்டையைக் காட்டுவோம். எங்களுடன் ஓரிரு வெளியூர் நண்பர்களும் கைகோக்க வேட்டை இனிதே தொடங்கும். பொரும்பாலும் அது நாய் வேட்டையாக இருக்கும். வேட்டை மாலைவரை நீடிக்கும். அசைவ உணவின் வாடை அண்டை ஊர்களில் உள்ள நாய்களை எங்கள் ஊருக்கு அழைக்கும். அப்படி வந்துசேரும் நாய்கள்தான் எங்களின் வேட்டை. எங்களுக்குத் துணை எங்கள் ஊர்நாய்கள்.
    இப்படித்தான் ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தில் அன்றைய வேட்டையும் தொடங்கியது. முதற்பந்தி முடிவதற்குள்ளாகவே உளவு பார்த்தாகிவிட்டது. இந்த இடத்தில் அந்த நாயைப்பற்றிச் சொல்லவேண்டும். நாங்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ளது அந்த தாத்தாவீடு. அந்தவீட்டு நாய்தான் எங்கள் இலக்கு. அதை இலக்காக்கப் பல காரணங்கள் உண்டு. நாங்கள் கூட்டமாகப் பள்ளிக்குச் சென்றால் அந்த நாய் ஒன்றும் செய்யாது. தனியாக நாங்கள் யாராவது வந்தால் போதும். எங்கள் இதயக்குலை நடுங்கும்படிப் பயங்காட்டும். இன்று கடித்தேவிடும் என்று ஒவ்வொருநாளும் தோன்றும். இதற்குப்பயந்து தாத்தாவீட்டுக்குச் சற்று முன்பாகவே யாராவது துணையாள் வருகிறார்களா எனக் காத்திருந்த அனுபவம் எங்கள் அனைவருக்கும் உண்டு.
    அது ஒரு பெண்நாய்… அல்ல பேய்நாய். கருத்த உருவம், காதை விடைத்துப் பார்த்தால் எந்த ஆண்நாயும் பயப்படும். அந்த அளவு பருத்த உடல்வாகு. அது நன்றியுடன் வாலை ஆட்டி நாங்கள் பார்த்ததேயில்லை. ஒரு முறை நானும் என் நண்பனும் பள்ளிக்குச் சென்றோம். மற்றவர்கள் முன்னதாகவே சென்றுவிட்டனர். அந்தத் தாத்தா வீட்டருகில் செல்லப் பயம். தூரத்திலேயே தயங்கி நின்றோம். அந்த நாய் எங்களைப் பார்த்துவிட்டது. எங்களை நோக்கி ஓடிவந்தது. இல்லை. பாய்ந்து வந்தது. சீறி வந்தது. அது வந்த வேகத்தில் கடித்துவிட்டுத்தான் நிற்கும் என்றே நினைத்தோம். எங்கள் பையில் இருந்த கை… இல்லை இல்லை (பயத்தில் மாற்றி எழுதிவிட்டேன்.) கையில் இருந்த பை எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை. அருகில் இருந்த வயலுக்குள் விழுந்தடித்து ஓடினோம். ஓடமுடியாமல் விழுந்தோம். எங்களை நெற்பயிர் மறைத்துக்கொண்டது. எங்களால் எழுந்து நிற்க முடியவில்லை.
எங்கள் உயிர் ஒருமுறை தலைக்குமேலே பறந்துவிட்டுப் பின் உடலுக்குள் வந்தது. நெற்பயிருக்குள் பதுங்கினோம். நேராக எங்கள் அருகிலேயே வந்துவிட்டது அந்த நாய். அதன் குரைப்போலி காதைப் பிளந்தது. எங்களை எங்கும் நகரவிடாமல் குரைத்தது. அதன் மூச்சுக்காற்றுகூட எங்கள் முகத்தில் பட்டது. எங்கள் உயிர் அதன் கையில்தான் என்றாகிவிட்டது. சுமார் பத்துநிமிடத்திற்கும் மேலாகக் குறைத்துக்கொண்டே இருந்தது. இந்த நாய் ஒரேயிடத்தில் குரைத்துக்கொண்டு நிற்பதைக் கண்ட அந்தத் தாத்தா ஒரு குண்டாந்தடியை எடுத்துக்கொண்டு ஓடிவந்தார். எங்கள் அலறல் கேட்டுவிட்டது. நாய்க்குச் சரியான அடி கிடைக்கப்போகிறது என எண்ணினோம்.  அந்தத் தாத்தா எங்களைப் பார்த்ததும் தடியைத் தரையில் ஊன்றிக்கொண்டு நாயை அதட்டினார். பாம்பையோ நரியையோ பார்த்துவிட்டதால்தான் தனது நாய் இவ்வாறு அடிவயிற்றிலிருந்து குறைப்பதாக அந்தத்  தாத்தா கருதினாராம். எங்களை நாய் விடுவதாக இல்லை தன் தலைவன் அருகில் இருக்கும் துணிவில் முன்பைவிடக் கோபமாகக் குரைத்தது. எங்கள் முகத்தில் நாயின் எச்சில் துளிகள் சிதறின. தாத்தாவின் அதட்டல் பலமானது. நாயின் கழுத்தைப்பிடித்துக்கொண்டு எங்களை விடுவித்தார். அந்த நாயின் ஆக்கிரமிப்பு எங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாதபடி அமைந்துவிட்டது.
எங்கள் உளவாள் சொன்னபடி இந்தநாய்தான் இலக்கு. முதற்பந்தி முடிந்திருந்தது. நாங்கள் வேட்டைத் திட்டம் திட்டினோம். நான் கண்மாய்க்கரைப் பக்கம் செல்லவேண்டும். அந்தவழிதான் நாய் தன்வீட்டுக்குச் செல்லும்வழி. ஒருவன் எச்சில் இலைகள் கிடக்கும் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து போக்குக்காட்டி நாயை ஊரைவிட்டு வெளியேற்ற வேண்டும். நாய் ஊரின் வடக்குப் பக்கமாக வெளியேறும். அத்திசையில்தான் அதன் வீடு. எனவே வடகில் உள்ள வயல்வெளிக்கு என்னுடன் இன்னும் சிலர் வரவேண்டும். நான் அவர்களைப் பிரித்து முக்கோணத்தின் புள்ளிகள் போல நிறுத்தினேன். எங்கள் வியூகத்தில் முக்கோணத்தின் உச்சிப்புள்ளியில் நான். அடிப்புள்ளிகள் இருவரும் கிழக்கிலும் மேற்கிலும் நாய் சிதறிவிடாமல் உச்சிப்புள்ளியில் நிற்கும் என்னை நோக்கி அனுப்ப வேண்டும். ஊரைவிட்டுத் தொலைவில் நான் நிற்க வேண்டும் ஊருக்கு வெளியே வீடுகளுக்கு அருகில் மற்ற இருவரும் நின்றபின் விசிலடிப்போம் அதன்பின்தான் நாயை வெளியேற்ற வேண்டும். என்பது திட்டம். துணைக்கு எங்கள் ஊர்நாய்கள் அழைக்கப்பட்டன. அவை வயிறுபுடைக்கத் தின்றுவிட்டு மரத்தடி நிழல் தேடிப் படுத்திருந்தன. வெளியூர் நாய்களைக் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் ஒன்றிரண்டு எங்கள் அருகில் வந்திருந்தன. அவரவர் திட்டப்படி விரைந்து கொண்டிருந்தோம். இதற்குள் நாயைப் போக்குக்காட்டி வெளியேற்ற ஆள் சென்றுவிட்டான்.
இந்த நேரத்தில் நான் கற்கள் தேடி எடுக்கவில்லை. நான் கண்மாய்க்கரைப் பக்கம் செல்லும்போதெல்லாம் கையில் ஒரு சிறிய அரிவாள் எடுத்துச்செல்வேன். அது நன்கு தீட்டிப் பதமாக்கப்பட்ட கொடுவாள் ஆளால் அளவில் சிறியது. அதன் கைபிடியோடு சேர்த்து ஓரடி நீளம் இருக்கும். நுனி வளைந்து சற்று எடையுடன் இருக்கும். தேங்காயைப் பின்னரிவாளால்த் தட்டி அந்த விரிசலில் அரிவாளின் மூக்கை நுழைக்கும் அளவுக்கு நுனி மெலிந்து வளைந்திருக்கும். தப்பித்தவறி கை பட்டால் காயத்துடன்தான் மீழும். அது எதற்கும் பயன்படலாம். அன்றும் எடுத்துக்கொண்டேன். கற்களைத் தேடாமல் வேகமாக நடந்தேன். வழியில் கற்களை எடுத்துக்கொள்ளலாம் என எண்ணியிருந்தேன். நான் விரைவாக நடக்கிறேன் என்ற பெயரில் ஓடுகிறேன்.
ஏற்கனவே ஊருக்குள்  நாயை விரட்ட ஆள் சென்றுவிட்டான். அவன் அவசரக்குடுக்கை. நான்தான் எல்லோரையும்விட தூரமாகச் செல்லவேண்டும். முக்கோணத்தின் அடிப்புள்ளிகள் அவரவர் இடத்தில் நின்றிருந்தனர். என்னை விரைவுபடுத்தினர். நான் என்னிடமுள்ள அரிவாளுடன் உச்சிப்புள்ளி அடையுமுன்னே எங்கள் எதிரி வீடுகளின் சந்துகளுக்குள் புகுந்து ஊரைவிட்டு வெளிய வந்தது. ஆனால் அதற்கு நேர் எதிரில் நான். நான் மட்டுமே. கையில் கற்கள் இல்லை. நாய் என்னைக் கடந்துவிட்டால் தப்பிவிடும். அதற்குப் பின்னால் எம்மவர்படை கையில் கற்களுடன் என்பெயரைக் கூவியபடி…
நான் வயல்வரப்பில் பதுங்கிக்கொண்டேன். நாய்க்கும் எனக்கும் இடைவெளி குறுகிக்கொண்டிருக்கிறது. சிலபத்து அடிகளுக்கு முன்னால் வரப்பில் பதுங்கியிருக்கும் என்னை நாய்; கண்டுகொண்டது. என்னிடமிருந்து தப்ப எனது வலது பக்கம் சாய்ந்து ஓடிவந்தது. நாய்க்கும் எனக்கும் பத்தடித்தூரத்துக்குள்தான் இருக்கும். ஓங்கி எறிந்தேன் நாய்க்கும் எனக்கும் இடையில் அது பறந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அது அரிவாள் என்பதை உணர்ந்தேன். நாயின் இடது முன்னங்காலுக்குப் பின் வயிற்றைப் பதம்பார்த்தது அரிவாள். வயிறு கிழிந்து குடல் வெளியே விழுந்தது. குடலற்ற நாய் இருமுறை உருண்டு பின் எழுந்தது. குடலை வாயில் கவ்விக்கொண்டு ஓடத்தொடங்கியது. ஆனால் கீழேவிழுந்தது. இவையெல்லாம் எங்கள் கண்முன்னே நடக்கிறது. நாய் கீழே விழவும் மற்றவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது. நாய் இறந்திருந்தது. ஆனால் அதன் வாயில் கவ்வியிருந்த குடலில் அடுத்தமாதம் வெளிவரவேண்டிய ஏழெட்டு நாய்க்குட்டிகள் எலிக்குட்டிகள்போல முண்டிக்கொண்டிருந்தன. அன்றிரவு நாங்கள் யாருமே சாப்பிடவில்லை. யாரும் யாருடனும் பேசவில்லை. இதயம் கனத்தது. உடலும் வலித்தது.
 ஏன் இப்படி உயிர்களைத் துன்பப்படுத்தவேண்டும்? என்ற கேள்வி முதல்முறையாக என்மனதில் எழுந்தது. நான்குநாட்கள் தொடர்நோவு காய்ச்சல். வேப்பெண்ணையைக் காச்சிக்காச்சித் உடலெலாம் தேய்த்தார்கள். நோவும் காய்ச்சலும் விட்டது. வேட்டையும் நின்றது. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். என்பதன் பொருள் புரிந்தது. நாய்கள் முதலாளிக்குப் பிரியமானதாக நடந்துகொள்கின்றன அவ்வளவுதான். இதில் நான் யார்? நானும் ஒரு நாயாய் இருந்திருந்தால் என்நிலை என்ன?
வெகுநாட்கள் வரை அந்தத் தாத்தா வீட்டுப்பக்கம் செல்லாமல் மாற்றுப்பாதை கண்டறிந்து பள்ளிக்குச்செல்வோம். ஆனால் ஒருநாள் வழியில் என்னைக் கண்ட தாத்தா ~~எம்புள்ளைய இப்படிச் செய்துட்டீகளே!! அது உங்களை என்ன செஞ்சது?|| எனக் கேட்டுக் கண்கலங்கினார். அவரது முகமும் அந்தப் பெண்நாய் முகமும் ஒன்றாகத்தான் எனக்குப்பட்டது. இன்றும் என்னால் மறக்கமுடியாத நிகழ்வாகி என் மனதில் சுழித்தோடிக் கொண்டிருக்கிறது. அந்த தாய்நாயின் வேகமான முயற்சிகள் என்னுள் மறையாத் தழும்பாகிக்கிடக்கின்றன. பின்நாளில் தாய்மையைப் புரிந்துகொள்ள முயலும்போதெல்லாம் என்னை எங்கும் நகரவிடாத ஒற்றைப்புள்ளியாய், நின்று அமித்தும் நிகழ்வாக அமைந்துவிட்டது.

நெகிழ்ந்த மனம்

மயிலான மயில்
 நான் ஓர் ஆசிரியன். என் பள்ளி எனக்குப் பல அனுபவங்களைத் தந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நான் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவை. அவற்றுள் சிறந்த ஒன்றை இங்கு எழுதுகின்றேன்.
 நான் பணியில் சேர்ந்த ஆண்டு பள்ளியிலேயே தங்கிப் பணிசெய்யும் அரிய வாய்ப்புக் கிடைத்தது. அதைச்சரியாகப் பயன்படுத்தியதாக நான் உணர்கின்றேன். இப்படி நான் உணர இதுபோல் பல அனுபவங்கள் உண்டு. தேவைக்கேற்ப எழுதப்படும்.
 அது நான் பணியேற்ற இரண்டாம் நாள். பள்ளி வளாகம் மாணவர்களற்ற மாலைப் பொழுதினுள் நுழைந்துகொண்டிருந்தது. பள்ளிநேரத்தில் எங்கள் வளாகம் எப்படி இருக்கும் என்பதை யாருக்கும் சொல்லத்தேவையில்லை. மழைக்குப் பயந்து பள்ளியில்கூட ஒதுங்காதவர்களும் எம் மாணவர்களின் திருவிளையாடல்களைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் மாலை நேர அமைதியை எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. அன்றைய மாலைப்பொழுதும் ஒருவித அமைதியில்தான் கழிந்துகொண்டிருந்தது. பள்ளிக்குப் பின்னால் விடுதியுள்ளதை நான் சொல்லவே இல்லை. இந்த விடுதியில்தான் எனக்கு மூன்று நேர உணவும். உணவைப்பற்றியும் அந்த மாணவர்களைப்பற்றியும் தனியோரு கட்டுரையே எழுத வேண்டும். அங்கே இருக்கும் நூற்றைம்பது மாணவர்களும் மாலையில் பள்ளிமுடிந்ததும் விளையாடுவார்கள். அவர்களது விளையாட்டுத் தொடங்கும்பொது வெளிமாணவர்கள் தங்கள் விளையாட்டில் பாதிநேரத்தைக்கடந்திருப்பதால் நல்ல ஆரவாரத்துடன் திடல் இருக்கும். நேரம் ஆறுமணியை நெருங்கும்போது அடைமழை விட்டதுபோல் அமைதியாகும் திடல். மறுநாள் வரை நீண்டு தூங்கும். பசுவைப்பார்த்த கன்றுபோல் துள்ளிவரும் மாணவர்கள் விளையாட்டு நேரம் முடிந்து விடுதிபுகும்போது சாலையைக் கடக்கும் எருமைபோல அசைந்தசைந்து செல்வார்கள். இங்கு எருமை எனச் சொல்லப்பட்டது அதன்வேகத்திற்காக மட்டுமே எனப் படிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
 அன்றும் அப்படியே நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. நான் அந்தப்பள்ளியில் புதியவன் என்பதால் வளாகவுலாச் சென்றுகொண்டிருந்தேன். இந்த வளாகத்தில்தான் எத்தனைவகை மரங்கள். தமிழகத்தின் வேறு எந்தப்பள்ளியிலும் இவ்வளவு வகை மரங்களைக் காண்பது அரிதே. புலிநகக்கொன்றை, சரக்கொன்றை, வாகை, புங்கை, தேக்கு, மகிழம், பூங்கரந்தை, மருது, இலுப்பை, செண்பகம் போன்ற அரிய வகை மரங்களுடன், நான் இதுவரைப் பார்த்திராத செடிகொடிகளும் திட்டுத்திட்டாக வளர்ந்திருந்தன.
பள்ளியை ஒரு முழுச்சுற்று முடிக்கும்போதுதான் அந்த இரு மாணவர்களும் என்கண்ணில் பட்டார்கள். அவர்கள் ஒருபெரிய கூண்டின் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். அந்தக் கூண்டை நான் அப்போது பார்க்கவில்லை என்றாலும் அருகில் செல்லும்பொதுதான் கண்டுகொண்டேன். இவர்கள் விடுதிமாணவர்கள். எனக்குத்தான் யாரிடம் பேசுவது என்னபேசுவது என்ற எண்ணம் அலையடித்துக்கொண்டிருக்கிறதே, எனவே அருகில் சென்றேன். என்னைக்கண்டதும்  நெருப்பைத்தொட்ட குழந்தையாகக் கையைக் கூண்டுக்குள் இருந்து எடுத்தார்கள். அப்போதுதான் நான் பார்வையைக் கூண்டுக்குள் செலுத்தினேன். அங்கு அசிங்கமான இரண்டு மயில்கள் ஒன்று பெண் என்பதுமட்டும் உடனே தெரிந்தது. அது என்ன அசிங்கமயில்கள்? மயில் என்றாலே அழகுதானே, என நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. மயிலிறகைப் புத்தகத்தில் வைக்கும் பழக்கமுடையவரா நீங்கள். உங்களைக்கு இந்த மயில்கள் ஏன் அசிங்கமானவை எனச்சொல்லத் தேவையில்லை. மற்றோன்றின் தோகைக்காகத்தான் இவர்கள் கைநீட்டித் தவம் இருந்தார்கள் என்பதைப் புரிந்துகொண்ட பின்னர்தான் மற்றொன்று ஆண்மயில் எனத்தெரிந்துகொண்டேன். நான் மயிலை இவ்வளவு அருகில் இதற்குமுன் கண்டதில்லை. என்பார்வையைச் சிலவினாடிகள் இந்த அசிங்கமயில்கள் அசையவிடவில்லை. இந்த இடைவெளியில் மாணவர்கள் இருவரும் எடுத்தனர் ஓட்டம். நானும் புதியவன் என்பதால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. மயில்களைப் பார்த்தேன். பார்த்துக்கொண்டேயிருந்தேன். அந்த ஆண்மயிலின் பல இறகுகள் பிடுங்கப்பட்டுள்ளதைப் புரிந்துகொண்டேன். என் அருகில் யாரும் இல்லை. விடுதி மாணவர்கள் அனைவரும் விளையாட்டுத்திடலில். நான் நிற்பதோ திடலிலிருந்து சிலநூறு மீட்டர் தொலைவிலுள்ள மயிற்கூண்டருகில். அந்த இடத்தில் நின்றுகொண்டு மயிலையும் தூரத்தில் மாணவர்களின் விளையாட்டுக் கூச்சலையும் ஒருசேர சுவைத்துக்கொண்டிருந்தேன்.
 ஆனால் மயில்கள் இரண்டனுள் ஆண்மயில் மட்டும் என்னருகில் வந்தது. எனக்குப் பயம் கலந்த வியப்பு. கூண்டில் சாய்ந்து நின்றவன் சில அங்குலங்கள் நகர்ந்து நின்றேன்.  எனக்கும் மயிலுக்கும் இடையில் கூண்டுமட்டுமே என்ற இடத்தில் நின்றது மயில். நான் மயிலின் கண்களையே பார்த்தேன். இதற்குமுன் இவ்வளவு அருகில் கோழியைத்தவிர வேறு எந்தப்பறவையையும் கண்டதில்லை. அதன் கண்களில் இருவிதக் கவலை இழையோடியிருந்தது. இதை நான் உணர்ந்துகொண்டிருக்கும்போதே. அந்தப் பெண்மயிலும் அருகில் வந்து நின்றது. அது தன்பங்கிற்கு என்கண்களையே பார்த்தது. அதன்பார்வையில் ஆயிரம் எண்ணங்கள் இருப்பதை உணர்ந்தேன். அத்தனையும் ஒரு கைதியின், அதுவும் தவறேதும் செய்யாமல் சிறையில் வாடும் கைதியின் கவலைதோய்ந்த எண்ணங்கள். என் இருப்பை நானே மறந்தேன். எங்கள் மூவரின் கண்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தன.
இப்போது என் செவியில் ஒலித்துக்கொண்டிருந்த மாணவர்களின் விளையாட்டொலி முற்றிலும் அடங்கியிருந்தது. கூண்டின் கம்பிகளும் என் கண்ணிலிருந்து மறைந்திருந்தன. மயிலின் பார்வையில் இருந்த இனம்புரிந்த கவலை என் கண்ணையும் தொற்றிக்கொண்டது. அன்பு கலந்த கவலைப்பார்வை என்னை வாட்டியது. இந்தப்பார்வை ஏன்? இந்த மயில்கள் என்னை ஏன் இப்படிப்பார்க்கின்றன. இதற்குமுன் யாரும் இதை நேசிக்கவில்லையா? நான் நேசிக்கிறேன் எனப்புரிந்துகொண்டனவோ? தெரியவில்லை. கண்வழி புகுந்த கவலை மனதில் வலித்தது. கண்கள் இமைக்க மறந்ததால் நீர் வடித்தன. இந்த நிலையில் நீங்கள் என்னைப்பார்த்திருந்தால், வீட்டு நினைப்பில் அழுதுகொண்டிருக்கும் ஒரு விடுதி மாணவன் என்றே நினைத்திருப்பீர்கள்.
இப்படியாக சில நிமிடங்கள் கடந்தன. நான் தன்னிலை உணர்ந்தது எப்போது தெரியுமா? விடுதி மாணவர்கள் தங்களின் விளையாட்டு நேரம் முடிந்து, குளிக்க வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் என் அருகில் வரும்போது எழுந்த காலடியோசை பட்டுத்தான். ஏன் என்ன நிகழ்ந்து இந்த மாணவர்களுக்கு இப்படி அமைதியாக நடந்து வருகிறார்களே?... இனி இந்த வளாகத்தில் மாறுநாள் காலைவரை அமைதி மட்டுமே. என்பதை அவர்களையும் அவர்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த விடுதிக்காப்பாளரையும் கண்டவுடன் புரிந்துகொண்டேன். அவர்களைக் கண்டதும் அங்கு நிற்க மனமில்லை. கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டு என்னறை நோக்கி நான்மட்டும் நடந்தேன். என்மனம் மயில்களின் கண்களில் ஒட்டிக்கொண்டிருந்தது. சற்று நடந்த பின் திரும்பிப்பார்த்தேன். மயில்கள் இரண்டும் என்னையே பார்த்திருந்தன.
இரவு பத்துமணிக்கெல்லாம் தூங்கியிருந்தேன். முதலாம் யாமம் முடிந்திருந்தது. கொசுக்களின் முற்றுகையால் தூக்கம்  தோற்றுப்போனது. புதிய இடத்தின் இரண்டாம் இரவு. முதலிரவு பயணக்களைப்பால் இனிதே நிறைவேறியது. இந்தத் தனிமை இரவும், கொசுவைப்போல் கொடுமையானதாகவே பட்டது. நேரம் சரியாக ஒருமணி. எண்ணத்தில் அசிங்கமயில்கள் வந்திருந்தன. அவற்றின் கண்ணகள் மட்டுமே என் எண்ணத்தில் என்றாலும் அக்கண்கள் மயில்களின் கவலையையும் கூண்டுக்குள் தவிக்கும் தவிப்பையும் முன்பைவிட அழுத்தமாய்ச் சொல்லிக்காட்டின. மாணவர்கள் பலருக்கு இறகு பறிகொடுத்த காயங்களாக அதன் இறக்கைகளும் வந்துபோயின. பெண்மயில் ஏதோ தப்பியதாக அதன் இறகுகள் காட்டின. ஆனால் மாணவர்களின் திருவிளையாடல் எனக்கும் அந்த ஆண்மயிலுக்குமே புரிந்திருந்தது. நீங்கள் யாரேனும் அந்தக் கூண்டைப் பார்த்தால் இரு பெண்மயில்களைத் தான் கண்டிருப்பீர்கள். என்னைப்போல் சற்றுக் கவனமாகப்பார்த்தால்தான் அதில் ஒன்று ஆண்மயில் என்பதே தெரியும். ஆனால் அந்த மாணவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருந்தது. துளிர்விடும் இறகுகளைக்கூட பிடுங்கிக்கொண்டார்கள். நூற்றைம்பது மாணவர்களில் நூறுபேருக்காவது இறகு பறிகொடுத்திருக்கும் என நினைக்கிறேன். அந்த ஆண்மயிலின் இறக்கையில் வடிந்து காய்ந்திருந்த இரத்தம் அதை உணர்த்திற்று.
இந்த இரவில் என்தூக்கத்தைக் கொசுக்கள் பாதிதான் கெடுத்தன. மீதியை இந்த மயில்களின் எண்ணமே கெடுத்தது. இருந்தாலும் எனக்குக் கொசுக்கள் மீது இருந்த வருத்தம் போல மயில்கள்மீது இல்லை. அதற்குப்பதிலாக என் கண்களில் சில துளிகள் நீர் வந்திருந்தது. எப்போது தூங்கினேன் என்பதே தெரியவில்லை. காலை எழுந்தவுடன் பள்ளியின் மூன்றாம் நாள் நினைவோடே எழுந்தேன்.
எனது பணியில் நான் மூழ்கியிருந்தாலும் அடிமனதில் மயிலின் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் கண்களைமூடி அந்தக்கண்களைப் பார்த்துக்கொண்டேன். அன்று மாலை பள்ளிமுடிந்ததும் முதல் வேலையாக உடைமாற்றிக் காத்திருந்தேன். விடுதி மாணவர்கள் விளையாடச் சென்றதும் மயிற்கூண்டை நோக்கி நடக்கத்தொடங்கினேன். ஏன் இவ்வளவு விரைவு? என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். கூண்டருகில் நான்செல்லச்செல்ல மாணவர்கூட்டம் ஒன்று அங்கிருந்து விலகியோடியது. நான் தூரத்தில் வருவதைக் கண்ட மயில்கள் முதல்முறையாக அகவின. அதன் அகவலொலி சில மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருந்த என் செவிகளை எட்டியபோது, அது நீண்ட நாட்களாய் அகவ மறந்திருந்தன எனக் கண்டுகொண்டேன். வறண்ட நிலத்தில் முதல்மழை ஏற்படுத்தும் புணர்வின்பம் அவற்றின் துள்ளலில் இருந்தது. அது சில வினாடிகள் நீடித்தது.
இன்றும் நேற்றைப்போல் நாங்கள் கண்மொழியால் பேசத்தொடங்கினோம். கூண்டு மறைந்தது, எங்கள் தூரம் மறைந்தது. கூடவே மயில்களின் துயரமும் மறையக்கண்டேன். ஓங்கிக்குரலெடுத்து ஆண்மயில் அகவக்கண்டேன். அதன் ஒலியில் “மிகவிரைவில் விடுதலையாகப்போகிறோம்”  என்ற மகிழ்வு நிறைந்திருந்தது. இந்த மகிழ்வுதான் தாய்மண் விடுதலைக்குப் போராடும் போராளிகளிடமும் இருக்குமோ? விடுதலை என்பதன் சுகம் எப்படிப்பட்டது? அடிமைக்குத்தான் தெரியும். தாயகச் சுகம் மனிதனிடம் இருந்தேயாகவேண்டிய ஒன்று, கானகச் சுகம் இந்த மயில்களுக்கு மறைக்கட்பட்டுள்ளது. தாயகச் சுகம் தமிழனுக்கு…ஏன்…மறைக்கப்படுகிறது? அந்த மயில்களின் மகிழ்ச்சிக்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அவற்றின் மகிழ்ச்சியைப் புரியமுடிந்தது. அதற்கு ஒருவகையில் நான் காரணம் என்பதும் புரிந்தது.
இவ்வாறு அந்த வாரம் முடிந்தது. அன்றைய காரி ஞாயிறு விடுமுறை என்பதால் நான் வெள்ளி அன்று மாலை என்னுடைய சொந்த ஊருக்குப் பயணமானேன். பயணவேகத்தில் பள்ளிமுடிந்ததும் பேருந்துபிடிக்கும் படலம் தொடங்கிவிட்டது. பேருந்தில் அமர்ந்தபின்தான் மயில்களின் நினைவு வந்தது. என்னசெய்வது? நினைவில் மட்டும் மயில்களைக் கண்டேன். மீண்டும் திங்கள் அன்றுதான் நேரில் காணமுடிந்தது. அந்தக்கூண்டில் நான் வராத மூன்றுநாட்களும் எப்படித்தான் உணவு உண்ணாமல் கழித்தனவோ அந்த மயில்கள். உணவுத்தட்டில் தானியங்கள் அப்படியே இருந்தன. என்னைக் கண்ட சிறிது நேரத்தில் தானியங்களைக் கொத்தத்தொடங்கின.
இப்படியாக ஒருமாதம் கழிந்தது. இப்போதெல்லாம் மாணவர்கள் மயில் இறகுக்குக் கைநீட்டுவது குறைந்திருந்தது. தலைமையாசிரியர் ஐயாவிடம் மயில்களை விடுவிப்பதுபற்றிப் பேசினேன். அன்று மாலையே மயிற்;கூண்டு திறக்கப்பட்டு, மயில்கள் விடுதலையாயின.; குற்றம் மெய்யாகாமல் காலம் கடந்து விடுவிக்கப்படும் குற்றமற்றவனின் நடை அவற்றின் கால்களில் இருந்தது. 
மயில்கள் வேறெங்கும் நடந்தவையல்ல. எனவே கூண்டைச் சுற்றியே வட்டமடித்தன.  அவற்றுக்குத் தம் தாய்விடு மறந்திருந்தது. புதிய அடைவிடமாக அருகில் இருந்த பட்டுப்போன வேப்பமரத்;தையே பயன்படுத்தின. மாணவர்களைக் கண்டால் தூர ஓடின. மாலைநேரங்களில் என் அறையருகே என்னுடன் நடந்தன. அப்போதெல்லாம் எனக்கு மிகப் பெருமையாக இருக்கும். என்கையில் இரைகொத்தும். என் கண்களில் வியப்பும், உள்ளங்கையில் ஒருவிதக் குறுகுறுப்பும் ஒரே நேரத்தில் வந்துபோன காலம் அது. மயில்களை இவ்வளவு அருகே கண்டிராத நான் இப்போதேல்லாம்; மயில்களுக்கு தண்ணீர் கொடுக்கிறேன். அவற்றிக்கு உணவளிக்கிறேன். அவற்றுடன் நடக்கிறேன். அவற்றின் தலையில் கைவைத்துத் தடவிக்கொடுக்கிறேன். அவற்றிடம் என் உரிமை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால் அந்த மயில்களை பிறர் யாரும் நெருங்கியதில்லை. நெருங்கினால் ஓடிவிடும். மாணவர்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில்தான் இவ்வளவும் நடந்தேறும். இரவானதும் அந்தப் பட்டுப்போன வேப்பமரத்தில் ஏறி அமர்ந்துகொள்ளும். இப்போதெல்லாம் பழைய இறகுகள் உதிர்ந்து புதிய இறகுகள் துளிர்விட்டிருந்தன. இதைப்பார்க்கும்போது காய்ந்துகிடக்கும் காட்டில் கோடைமழைக்குப் பின் துளிர்க்கும் பசுமை நினைவுக்குவந்தது.
இப்படித்தான் ஒருநாள் அந்த நிகழ்வு நடந்தது. அந்த மயில்கள் இதுவரை சந்தித்திராத புதிய சூழல். அன்று இரவு ஒருமணிக்கெல்லாம் பலத்த காற்றுடனும் இடியுடனும் மழைபெய்யத்தொடங்கியது. அந்த மழை, மயில்கள் விடுதலையான பின் பெய்த முதல்மழை. அந்த மழையின் தொடக்கத்தில் எங்கோ விழுந்த இடிக்காக எங்கள் வளாகத்திற்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. எங்கும் மையிருள். மின்னும் ஒளியில் எல்லாத் திசையும் சிலவினாடி பகலாகிப்பின் இரவானது. எனக்கும் இந்த வளாகத்தில் தங்கத் தொடங்கியபின் பெய்யும் முதல் மழை. இடியோசை காதைப் பிளக்கும்போது எப்படித் தூக்கம் வரும்? தூங்குபவன் செவிடன். எனவே விழித்திருந்தேன். சுழன்றடித்த காற்றும், வெட்டிப்பிழந்த மின்னலும், கொட்டி முழங்கிய இடியும் என்மனதில் மகிழ்வைத்தந்தன. என் அறையில் எனக்கிருந்த தனிமை அடிவயிற்றில் பட்டாம் பூச்சியாப் பறந்தது. தனிமை எனக்குப் புதிது. அந்தத் தனிமைபற்றி மற்றோரு கதையில் எழுதுகிறேன். அறையில் பயமில்லை என்றாலும் அரைப்பயம் கொண்டவன் நான். இரவில்தான் பயம். வெளியில் பயத்தையும் நடுக்கத்தையும் காட்டாமல் எப்படிப் பயப்படுவது என எனக்குச் சிறுவயதிலேயே தெரிந்திருந்தது.
திடீரென மயிலொன்று அகவக்கேட்டேன். என் உள்ளம் அந்த பட்டமரம் நோக்கிப் படபடத்தது. மழை என்னை அறைக்குள் சிறைவைத்திருந்தது. அந்தநேரம் மட்டும் பகலாய் இருந்திருந்தால், அந்தப் பேய்மழையிலும் பட்டமரம் நோக்கிப் பறந்திருப்பேன். மழையில் நனைவதும், வெயிலில் காய்வதும் எனக்கு ஒன்றே. இரவச்சம் என்னைத் தடுத்தது. மழையும் கனத்திருந்தது. விடியும் வரை காத்திருந்தேன். விடிந்ததும் மரம் நோக்கி நடந்தேன்.
அங்கே கண்ட காட்சி என் மூளைக்குள் இடியாய் விழுந்தது. மரம் சாய்ந்து கிடந்தது. மயில்களுக்கு என்ன நேர்ந்திருக்கும்… ஓடினேன். மரத்தின் கிளைமுறிவுகளுக்கிடையில் அந்த புதிய இறகுகளின் மினுமினுப்புடன் உயிருக்குப் போராடியபடி தலையைத்தூக்கித் தூக்கி என்னை எதிர்பார்த்தபடி ஆண்மயில் கிடந்தது. அதைக்கண்டவுடன் கிளைகளை அகற்றி மயிலைத்தூக்க முன்னேறினேன். மயிலின் இடது இறக்கையின் கீழ் ஒரு பட்டமரக்குச்சி குத்திக்கொண்டு நின்றது. அருகில் நான் சென்றிருந்தாலும் மயிலை விடுவிக்க அந்தக்குச்சி தடுத்தது.
எப்படியோ ஒருவழியாக குச்சியைப் பிடுங்கிவிட்டு, மயிலைக் கிளைகளுக்கிடையே இருந்து மெதுவாகத் தூக்கினேன். மயிலின் கண்கள் மூடிமூடித்திறந்தன. வேகமாக அறைக்குக் கொண்டுசென்றேன். சாக்கை விரித்து மயிலை அதன் மீது கிடத்தினேன். மயிலின் தலைதரையோடு கிடந்தது. இறக்கையில் ஒன்றுமட்டும் உடலோடு மூடியிருந்தது. மற்றொன்று விரிந்திருந்தது. இதற்குள் நன்றாக விடிந்திருந்தது. மாணவர்கள் தாமதமாகவே துயிலெழுந்தனர். அவர்களுள் சிலர் என்னருகில் சூழ்ந்திருந்தனர். ஒருவன் என் கட்டளைக்கிணங்கி மஞ்சள்தூள் கொண்டுவந்திருந்தான். மயிலுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில் விடுதிமாணவர்களுக்குக் காலைப்படிப்பிற்கான மணி ஒலித்தது. மாணவர்கள் ஓடிவிட்டனர். அவர்கள் சென்றபின் அந்தப் பெண்மயில் எங்கிருந்தோ அங்கே வந்தது. என்னருகில் நின்று ஆண்மயிலைப்பார்த்தது. அந்த ஆண்மயிலுக்கருகில் சிறிது தண்ணீரும் அரிசியும் இட்டுவிட்டு நானும் நின்றுகொண்டிருந்தேன்.
நேரம் யாருக்கும் காத்திராமல் கடந்துகொண்டிருந்தது. காயத்துடன் போராடிப்போராடி இறந்துகொண்டிருக்கும் மயிலைக் காணும்போதே உள்ளம் பதைத்தது. இந்த மூன்றுமாதங்களில் என்னுடன் இந்தளவுக்கு மனிதர்கள்கூட நெருங்கியதில்லை. இந்த மயில்கள் மட்டும் நெருங்கினவே எப்படி? மயில்களுக்கு நான் அப்படி என்ன செய்துவிட்டேன்? இதற்குமுன் யாரும் இவற்றை நேசிக்கவில்லையா? நேசிப்பு என்பது இதுதானோ? இந்த இயல்பான நேசிப்புக்கு மயங்கி என் கால்களையே வளையவந்தனவே ஏன்? இப்படி என்மனம் பலதுண்டுகளாக வினாக்களை எழுப்பிக்கிடந்தது.
அப்படியே அருகில் அமர்ந்தேன். என்கண்களில் நீர் அரும்பியிருந்தது. கண்ணீர் கண்களின் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டது. சில துளிகள் ஆண்மயிலின் தலையில் பட்டன. அதன் கண்கள் அரைமட்டும் திறந்தன. ஒடிந்த இறக்கையைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது. நானும் உதவிசெய்தேன். எப்படியோ சில வினாடிகளில் எழுந்து நின்றது. உடலை ஓங்கிச் சிலுப்பியது. அதன் வலப்பக்க இறக்கையில் புதிதாக முளைத்துப்பாதி வளர்ந்திருந்த இரண்டு இறகுகள் என் மடியில் விழுந்தன. நான் இறகுகளை எடுத்தேன். மயில் கீழே விழுந்தது. அதன் கண்கள் மூடியிருந்தன. பெண்மயில் ஓங்கி அகவியது. என்ன நடந்தது எனப்புரிந்து கொண்டேன். தன்நிலை உடைந்தேன். இனம்புரியாத் தவிப்பும் சொல்லமுடியாச் சோகமும் சூழ்ந்துநின்று கூத்தாடின. மனம்தான் கூத்துமேடை. கூத்தைக் காண யாருமில்லை பெண்மயிலைத்தவிர.
மாணவ நண்பர்களுடன் இறுதிச்சடங்கிற்கு அணியமானேன். அருகில் இருந்த முருங்கை மரத்தருகில் குழிவெட்டப்பட்டது. நாய் நோண்டா ஆழத்தில் மயில் துயிலச்சென்றது. எல்லாம் நிறைவேறியது. நான் நின்றுகொண்டிருந்தேன். என்னருகில் ஒற்றைக்கண் பெண்மயில். பெண்மயிலுக்கு ஏன் ஒற்றைக்கண்? பட்டமரம் பதம்பார்த்திருந்தது. இரத்தம் விழிவழி வழிந்திருந்தது. அது இரத்தக்கண்ணீராயும் இருக்கலாம். துணையற்ற துயரத்தில் பயணத்தின் பாதியில் நின்றுகொண்டிருந்தது.

Friday, October 29, 2010

கவிதை

மாற்று
(வெண்சீர் வெண்டளை)

அரசியலில் நல்லாட்சி அன்றுபோல் இன்றில்லை
ஆன்றோர்கள் நன்னடத்தை எல்லாமும் நூற்கதையே
ஆனாலும் நல்லாட்சி நாள்தோறும் உள்ளதுபோல்
ஆளுக்கு ஆள்பொய்யும் பேருக்குப் பட்டமுமாய்
பெற்றுள்ள பொய்நிலையாம் வீங்குற்ற இந்நிலையை
நல்வளர்ச்சி என்றெள்ளாப் பத்திரிக்கைச் செய்திகளும்
நல்கிடுதே என்சொல்ல பத்திரிக்கைப் பொய்ப்போக்கை
அல்லவற்றுள் நல்லவற்றை நாள்தோரும் தேடிடுக
அன்றேங்கள் ஆசான்கள் சொல்லிடவே கேட்டுள்ளோம்
இன்றுள்ள எல்லாமும் அல்லவையே - ஆக நீ
இன்றேபோய் மண்ணல்லித் தூற்று - மறுநாளே
இன்நிலையைச் சீர்திறுத்தி மாற்று.
இது கதைகளின் நேரம்



தமிழ்






நாப்பிறழ்த்திகள்
1. புது புளிச்சாக்குச்சி பழைய பருத்திக்குச்சி
2. கிழவன் உழுத புழுதியிலே கிண்டி முளைத்த பனங்குட்டி கீழேழோலை மேலேழோலை மொத்தம் பதிநான்கோலை.
3. கட்ட வாத்து போட்ட முட்டை குட்ட முட்டை. குட்ட முட்டை போட்ட வாத்து கட்ட வாத்து.
4. அமேரிக்கப் பேரிக்கா போனது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்கா போன அமேரிக்கப் பேரிக்கா சொல்லாமக் கொள்ளாமத் திரும்பியது அமேரிக்கா.
5. ஆக்காட்டிக்குருவியைத் தாக்காட்டி காத்தாட்டி விட்டான் காட்டாத்திப்பையன்.
6. காக்கா தட்டிக் கொட்டிப்போச்சு தாத்தா பெட்டி, தாத்தா தட்டிக் கெட்டுப்போச்சு காக்கா முட்டை.
7. நேத்துச் செத்து உதிச்ச கொசத்தி இன்னும் கெடக்கிறா திண்ணையிலே.